Pages

Saturday 27 April 2013

உணர்வின் பிரதிபலிப்பு


   

ஊமையாய் என்னுள் உறங்கி கிடந்த
உணர்வின் பிரதிபலிப்பாய்
தொலைவில் தெரிந்த விளக்காய்
அனுதினமும் அவ்வொளியை 
தேடிய -என் ஆத்மாவில்
பிரமிப்படைந்து சங்கமிக்கின்றேன்
அந்த ஒரு அதிசய ஊற்றில்...

மகிழ்ச்சி எனும் பட்டாடையை 
போர்க்கின்றேன்
மனதில் அவனைப்போல்
உடலிலும் தழுவிச்செல்லும்
அவன் ஸ்பரிசம்
உணர்கின்றேன் உறுதியாய்
இறுதிவரை பயணிப்பேன் 
இப்பாதையில் என...

வரண்டு கிடந்த  நிலமாய்
வெடித்த செம்மண் இடையே
புத்தம் புது ரோஜா பூத்தது
போல் ஓர் அதிசயமாய்...

அன்பெனும் உணர்வு
அகலாத பாசமாய்..
வடுக்களுடன் போராடும் வலியை
அறிந்து காயத்தை சிறகினால் வருடிட
வந்த ஓர் உணர்வாய்...

கண்களால் எனை விழுங்கிய அவனின்
காதல் ஸ்பரிசம் என்னுள் ஏற்படுத்திய
தீயில் உருகி ஊறி வடிந்த ரசமாய்
அனல் கொதிக்க அடைக்கலமானேன்
அவன் கூட பயணிக்க...!
---- தாரிணி----


Sunday 31 March 2013

நிமிர்ந்து நில்லடி பெண்ணே!

கவிஞர் என்று சொல்லிடுவார்,
கதை பல பேசிடுவார்,
இளைஞர் என்று கூறுவார்,
இன்னல் பல தந்திடுவார்
உன்னைப் போல் அழகி இல்லை என்பார்,
உன்னை விட்டால் யாரும் இல்லை,
நீ இல்லாமல் நான் இல்லை,
உலகில் வாழப் பிடிக்கவில்லை,
நீ கிடைக்காவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வேன்
என்று எல்லாம் கூறுவார்,
இனிக்க இனிக்கப் பேசி உன்னை வீழ்த்துவார்,
அன்பு மழையில் உன்னை நனைய வைப்பார்,



வானில் இருக்கும் நிலா வேண்டுமா,
தேனில் ஊறும் பலா வேண்டுமா,,
நீ கேட்டதெல்லாம் உனக்குக் கிட்டிடும்,
எல்லாம் நீ கிடைக்கும் வரை,
உன்னை அடையும் வரை,
ஓடி ஓடி வந்து சேவை செய்வார்,
பின் வேட்கை தீர்ந்ததும் ஓடி விடுவார்,
ஜாக்கிரதையடி பெண்ணே,


சுற்றிச் சுற்றி வருவது காம வேட்கைக்கு,
பின் தன்னிலை திரும்பும்போது,
ஏமாற்றி விடுவார், பெண்ணே,



இச்சையை உண்மையான காதல்
என்று நம்பி விடாதே,பொய்
இனிப்பாக இருக்கும்,
உண்மையான, பண்பான காதல் எதையும் எதிர்பார்க்காது,
அவசரப் படாதே பெண்ணே,
உன்னை வித விதமான வார்த்தையால்
மயக்குவார்,கற்பென்றும் பெரிதாம்,
அதை இழந்தால் உடலால் மட்டும் அல்ல,
உள்ளத்தாலும் பெரும் போராட்டம்,
நிமிர்ந்து நில்லடி பெண்ணே!

Friday 29 March 2013

சங்கமம்



என் பிறப்புக்கு  உயிர் தந்து 

என் உடலுக்கு  உணர்வு தந்து 

எனக்குள் உறைந்து 


என்னை ஆ வந்து 

என்னை உன் நினைவினிலே 


சஞ்சரிக்க வைத்த 


என்னவனே..... 



பெண்மையின் இரகசியங்களை 

அறிந்து  அவளை பொக்கிஷமாய் 

மலர வைக்கும் 

உன் ஆண்மையின் வசமாகினேன்... 



உன் பாத கமலங்களில் 

சமர்ப்பிக்கப்பட வேண்டிய 

பிரத்தியேக மலராக மலர்ந்து 

மகரந்தம் நிறைந்து 

எழிலோவியமாக மிளிர்ந்து 

அர்ப்பணிப்புக்கு தயாராக இதோ  இங்கு நான் ...

---தாரிணி ---


ஓயாத அலை




நினைவுகளில் நெகிழ்ந்து

சிறகொடிந்த பறவையொன்று

சரி பார்க்க துடிக்கின்றது

தன் சிறகுகளை...

ம்..சற்று காலமெடுக்கலாம்



நீண்ட இரவுகள் திடுக்கிட்டு

எழ வைக்கும் சப்தங்கள்

மகிழ்ந்திருந்த தருணங்கள்

ஆன்மாவில் கலந்து கண்ணீராய்

காலத்தால் மறைந்து விட்ட வாக்குகள்

வெற்றுபார்வையில் கண்ட முகம்

மறக்க விடை தேடும் விடிவுடன்...




சிப்பியின் ஓடு திறந்து ஒளிரும் 
முத்துப் போன்றதாக இருந்த உறவு கனவாகி...
உணர்வுகள் ஊமையாகி

மனதில் பட்ட காயத்தின் வலி மறைய

தனி மரம் என்னுடன் பயணிக்க

தன்னம்பிக்கை கரம் நீட்டுகின்றது....





காதலின் வலிகளுடன் கரையை தேடி

இருளூடே தெரியும் ஒளியில்

அலை அடிக்கும் வழியில்

கலங்கரை விளக்கைதேடி

காலூன்ற அதிக காலம்

எடுக்கப்போவதில்லை....





 ஓயாத அலையாய்
நெடுந்தூரப் பயணம்

சிறகடித்து பறக்கும்

ஒற்றைக் குருவியான

பறவையின் கூக்குரலை

உயிரினில் கலந்த வலியை

மாற்ற வழியை தேடும்

அலைகள் ஓயப்போவதில்லை...!

---தாரிணி---








Tuesday 26 March 2013

நிஜமான நீ நிழலாய் இன்று


அன்பான அதிர்ஷ்டமான
அறிவான செல்வக்குழந்தையாக

எல்லா உறவுகளின்
எதிர்பார்ப்பில் இப்பூமியில்
உதித்தேன்

காலத்தின் சதியால்
எல்லா உறவுகளூம்
என்னை விட்டுப் பிரிந்துப் போயின…..

அன்புக்கு மட்டுமே
ஏங்கிய நான்
நிஜத்தை தேடி
உண்மையை தேடி
பல மைல்கள் நடந்து
களைப்படைந்தேன்

சில பொய்யான
உறவுகளால் ஏமாந்தேன்
பல நிழல்களை
நிஜமென்று நம்பினேன்

எல்லா உறவுகளூம்
நிழலாகி போனபோது......
நீ என்னுடன் உறவாட வந்தாய்

நிஜமான உறவொன்று
எனக்காக என
உன் உறவை போற்றி
வணங்கி வாழ்ந்தேன்


என் இதயத்தின்
தலைவனாய் - நீ வந்தாய்
இறுதி வரை எனக்கென
நீ இருப்பாய் என்றெண்ணி
மனமகிழ்ந்திருந்தேன்

ஆனால்.. நீயோ....

உன் தேவைகளுக்காக
உன் ஆறுதலுக்காக
உன் விருப்பங்களுக்காகத்தான்
என்னுடன்
உறவாடினாய் என அறிந்தேன்
விடை பெறாமலே நீ
சென்று விட்டாய்.....


அப்போது தான் அறிந்தேன்
எல்லா உறவுகளூம்
ஏதோ ஒன்றை
எதிர்பார்த்துதான் வருகின்றது
அதில் நீயும் விதி விலக்கல்ல...


நிஜம் எது நிழல் எது
என்று தெரியாமல்
ஏமாந்து நிற்கிறேன்
இன்று வரை...
உன்னை என் இதயத்தில்
சுமந்து...

--தாரிணி---